ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்று கூறுவதா..!!! – ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Share This News:

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அமேதி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சுப்ரீம் கோர்ட்டுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடே பிரதமர் மோடியை திருடன் என கூறுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதியை எடுத்துரைத்திருக்கிறது. இது கொண்டாடப்பட வேண்டிய தினமாகும்’ என கூறினார்.

இவ்வாறு ராகுல் காந்தி தொடர்ந்து செய்தியாளர்களிடம் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு, ராகுல் காந்தி ஏப்ரல் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு கூறியது போல் எதுவும் கோர்ட்டில் கூறப்படவில்லை. அதுப்போன்ற வார்த்தைகளை கோர்ட் ஒரு போதும் அனுமதித்ததில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் என்ன இருந்ததோ அதனை முன்னிட்டே முடிவு மேற்கொள்ளப்பட்டது என நீதிபதிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#RahulGandhi #SupremeCourt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *