Sun. Jun 16- 2019

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ15 கோடி நிதியுதவி அளித்த HCL சிவ் நாடார்

Share This News:

மதுரையில் உள்ள நகராட்சிப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவர், அரசுப்பள்ளியின் நிலையை நேரில் கண்டு ரூ15 கோடியை பள்ளிக்கு நன்கொடையாக அளித்து, பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

இதுபோன்று முன்னாள் மாணவர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்பதற்கான உதராணமாக மட்டும் இவர் விளங்கவில்லை.

அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்று, ஐடி உலகத்தையே ஆள முடியும் என்பதற்கான உதாரணமாய் திகழும் ஹெச்சிஎல் கம்பெனியின் நிறுவனர் சிவ் நாடாரே, இத்தொகையை அளித்து மதுரை பள்ளியை ஹைடெக்காக மாற்றியுள்ளார்.

இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் மாபெரும் சாதனை படைத்துவரும் சிவ் நாடார் ஆரம்பத்தில் கும்பகோணம் பள்ளியில் படித்து, பின் 1954ஆம் ஆண்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.

1937ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி, 1950ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகவும், 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

2011ஆம் ஆண்டு, தான் படித்த பள்ளியை காண வந்திருந்துள்ளார் சிவ் நாடார். தான் படித்த வகுப்புகள், ஓடியாடிய விளையாட்டு மைதானம் அனைத்தையும் கண்ட அவருக்கு அழகிய நினைவுகள் வந்தும் மனமகிழ்வைத் தரவில்லை.

காரணம், பள்ளியிருந்த நிலை அப்படி. உடனே, பள்ளியின் தரத்தை மேம்படுத்த 100 கம்ப்யூட்டர் வசதி கொண்ட கம்ப்யூட்டர் லேப் ஒன்றை 1கோடி ரூபாய் செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.

“2011ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்தவர், பள்ளியில் அவர் படித்ததற்கான சான்றுகள் இருக்கா என்று கேட்டார்.

நாங்களும் பழைய ஆவணங்களைப் பார்த்து, இருக்கிறது என்று சொன்னவுடன் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அப்போவே கம்ப்யூட்டர் லேப் வைக்கணும்
என்று நிதியுதவி அளித்து முழுவேலைகளை அவரே செய்து தந்தார்.

அதன் பிறகு, பள்ளியின் மேம்பாட்டுக்குத் தேவையானவைகளை பட்டியலிட்டுத் தாருங்கள் என்று கேட்டார். நானும் ஆசிரியர் குழுவும் இணைந்து, ஒரு பட்டியல் தயார் பண்ணினோம். அவர் நாங்க எதிர்பார்த்ததிற்கும் மேலாக செய்து கொடுத்துள்ளார்,”

என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன்.

அழகிய வண்ணங்களில் பள்ளியின் சுவர்களை அழகுபடுத்தி, 26 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட இரு கட்டிடம், வகுப்பறைக்குள் 20 இன்ச் நீள கரும்பலகை, பள்ளி வளாகத்திலேயே மினரல் வாட்டருக்காகத் தனி பிளான்ட், 100 கணினிகளுடன் நவீன லேப், 10,000 புத்தகங்கள் கொண்ட முற்றிலும் குளிர்சாதன வசதிக் கொண்ட நூலகம், நவீன கூடைப்பந்து மைதானம், கபடி மைதானம், பள்ளிவளாகத்தில் அழகிய பூங்கா என முன்னிருந்த பள்ளியின் சாயலே தெரியாதவாறு ரூ15 கோடி செலவில் மாற்றிக் கொடுத்துள்ளார் சிவ்நாடார்.

“கடந்தாண்டு பள்ளிக்குத் தேவைகளை பூர்த்திசெய்ய ஒப்புதல் தெரிவித்து வேலைகளைத் தொடக்கினர்.

வெறும் நிதியுதவியாக அளித்து ஒதுங்கிக் கொள்ளாமல், HCL நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை இவ்வேலைகளைக் கண்காணிக்க நியமித்து, அவர்களே முழு வேலைகளையும் முடித்துத் தந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் பள்ளிக்கு வந்திருந்தார் சிவ் நாடார். கடந்தாண்டு தேசிய கபடி போட்டியில் எங்கள் பள்ளி தான் சாம்பியன். அதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

பள்ளியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களின் திறமையையும் கண்டறிந்து உற்சாகப் படுத்தவும் ஹெச்சிஎல் பணியாளர் ஒருவரை இப்போது நியமித்துள்ளார்.

இந்தாண்டு 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளோம். கடந்த சில ஆண்டுகளில் குறைந்தகொண்டே வந்த மாணவர் சேர்க்கை விகிதமும் இந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

”பள்ளியின் மாற்றத்தைக் கண்டு மகிழும் மாணவர்கள், அவர்களும் வருங்காலத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்று பள்ளியை மேலும் உயர்த்துவோம் என்று கூறும் போது சந்தோஷமாக இருக்கிறது,” என்றார் தலைமையாசிரியர் ராஜேந்திரன்!

இவர் போலப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் இருப்போர்,

தங்களது பள்ளிகளுக்கு இயன்றதைச் செய்து கை தூக்கி விடலாம். முயன்றால்
முடியாதது எதுவுமில்லையே!

@பாண்டியன் சுந்தரம்

#newsbank.in

#shivnadar #hcl #school #help #elangoschoolmadurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *